ஞாயிறு, 28 மார்ச், 2010

கடைசி ஆசை!

என் மூச்சுக்காற்றாய்
உன்னை சுவாசித்தேன்;
என் மூச்சையே
நிருத்திவிட்டாயடி!

என் வாழ்க்கைத்துணையாய்
உன்னை யாசித்தேன்;
என் வாழ்க்கையை
முறித்துவிட்டாயடி!

என் உயிருக்கும் மேல்
உன்னை நேசித்தேன்;
இதோ-என் உயிரையும்
பறித்துவிட்டாயடி!

கடைசியாக ஒரு ஆசை....

உன் காலடித்தடங்களின்
கைப்பிடி மண்ணெடுத்து
என் கல்லறை சுவற்றுக்கு
கலப்படமாய் தந்துவிடு;
உன் பாதச்சுவடுகளில்
படுத்து உறங்குகிறேன்!

சனி, 27 மார்ச், 2010

மழைத்துளியே!

யார்மடியில் நீ பிறந்தாய்?
யாரைத்தேடி ஓடிவந்தாய்?
மண்ணின் மடியில் மடிந்துபோன
மழைத்துளியே....
மண்ணை முத்தமிட்டதில்
வெற்றிகண்டாயோ-இல்லை
மரணத்தையே முத்தமிட்டு
வெற்றிகொண்டாயோ!

ஹைக்கூ....

காதல் தோல்வியோ...!
வானிலிருந்து குதித்து தற்கொலை
செய்துகொண்டது-மழைத்துளி!

பூர்வஜென்மத்து வரமோ...!
வருபவர்க்கெல்லாம் நிழல்தந்து
வாடிக்கொண்டிருக்கிறது -மரம்!

யார்விட்ட சாபமோ...!
கல்லாகவே காட்சிதருகிறார்
கடவுள்!

எவ்வளவு சம்பளம்...!
மாதம் ஒரு விடுப்போடு இரவெல்லாம்
பூமிக்கு கூர்காவாய்-நிலவு!

புதன், 24 மார்ச், 2010

ஈழம்!

அழாதே தமிழா...



அண்ணன் இருக்கிறான்,



நிச்சயம் வருவான்,



தனிநாடு பெறுவான்!



ஆறுதலாய் இங்கே



அன்புச்சகோதரன்!



அடங்காதே தமிழா...



தமிழர்தலை நிமிரட்டும்,



அலைகடலென திரளட்டும்,



உலகமே மிரளட்டும்,



ஆவேசமாய் இங்கே



தன்மானத்தமிழன்!


சிலர் வெடித்தார்,


சிலர் துடித்தார்-ஏன்


முத்துக்குமரனைப்போல்


சிலர் மடிந்தார்!


ஆனாலும் இங்கே


சிலர் நடித்தார்!

அதனால்தான் தமிழனை அங்கே முடித்தார்!

மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்!






காதலித்துப்பார்....

காகம் கரைவதுகூட
கானா பாடலாகும்;
கழுதையின் சத்தம்கூட
காதுகளில் கவிதைபாடும்!

முள்ளின் நுனியும்கூட
கையில் பேனாவாகும்;
கள்ளிச்செடியும்கூட
காதலின் சின்னமாகும்!

செவ்வாய், 23 மார்ச், 2010

தமிழ்!

பாலூட்டி வளர்த்தது

தாயென்றால்-எமை

தாலாட்டி வளர்த்தது தமிழன்றோ!

கல்தோன்றி மண்தோன்றா காலத்து

முன்னரே தோன்றிய

மொழியன்றோ!

பார்போற்றும் செம்மையான

மொழியென்றால்-எம்

தமிழுக்கு நிகர்

வேறுண்டோ!

தேனைவிடச் சுவை

உண்டென்றால்-அது

பார்கடல் தந்த அமுதன்றோ,

அதைவிடச்சுவை எதுவென்றால்

திகட்டாது தித்திக்கும்

தமிழன்றோ!

பெண்ணே...

வறண்டுகிடக்கும் பாலைக்கும்,
வளர்ந்துநிற்கும் பயிருக்கும்,
வானம்தான் காரணமாமே;
இல்லை,
உன் நாணம்தான் என்று
நான் சொல்வேன்!
உன் நாணம்,
பயிருக்கு உரமாகியிருக்கும்!
பாலைக்கு உருமாற்றியிருக்கும்!

கவிதை!

காதலின் விதை...
கற்பனைகளின் கதை...
கவிஞனின் வித்தை...
காற்றுக்கும் உருவம்தரும் -கவிதை!

திங்கள், 22 மார்ச், 2010

தாய்!

பாசம் வைத்தாய்,நேசம் வைத்தாய்;
நடக்க வைத்தாய்,ஓட வைத்தாய்;
சிரிக்க வைத்தாய்,சிந்திக்க வைத்தாய்;
அழகு தமிழை கற்றுக்கொடுத்தாய்,
அன்போடு என்னை -நீ
வளர்த்தாய்,என்னை
பெற்றெடுத்த தாயே....
நீதானே எனக்கு உயிர்கொடுத்தாய்!

காதலியே...

பூ வாடினால் இருக்காது

அதன் வாசம்;

நீ வாடினால் இருக்காது

என் சுவாசம்!